Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூரில் ரூ.5.28 லட்சம் மதிப்பில் மாவட்ட திறன் மையம்: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

திருவள்ளுர், மார்ச் 4: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 23 திறனகங்களை காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலக முதல் தளத்தில் ரூ.5,28,194 செலவில் அமைக்கப்பட்ட மாவட்ட திறன் மையம் திறனகத்தை மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், திருவள்ளுர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு குத்து விளக்கு ஏற்றி இனிப்புகளை வழங்கினர்.

அப்போது கலெக்டர் கூறியதாவது, தமிழ்நாடு அரசு மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் மொத்தம் ரூ.5.96 கோடி மதிப்பீட்டில் திறனகம் எனும் சிறப்பு மாவட்ட திறன் மையங்களை நிறுவியுள்ளது. இம்மையங்கள், இளைஞர்களின் தொழில் விருப்பங்களை தொழில்துறை தேவைகளுக்குகேற்ப திறன்களுடன் ஒருங்கிணைத்து நிலையான மற்றும் பயனுள்ள வேலைவாய்ப்பைப் பெற வழிகாட்டும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த மையங்களாக செயல்படுகின்றன.

ஒவ்வொரு திறனகமும் ஒரே இடத்தில் தொழில் வழிகாட்டல், திறன் மேம்பாட்டு ஆலோசனை, பயிற்சி இணைப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளுக்கான அணுகல் ஆகியவற்றை வழங்கும் ஒருங்கிணைந்த சேவை மையமாக செயல்படுகிறது. இம்மையங்கள் மாவட்ட கலெக்டரின் வழிகாட்டலில் மாவட்ட திறன் அலுவலர்களால் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் ஆதரவுடன் நிர்வகிக்கப்படுகின்றன. மாவட்ட தலைமையகங்களில் கணினி வசதி, குளிர்சாதன வசதி, உபகரணங்கள் மற்றும் பிற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் இம்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் 23 திறனகங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இது மாநிலம் முழுவதும் மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கிய கட்டமாகும். அதே நிகழ்வில், திறனகங்களின் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்த முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் ஐஐடி சென்னை இடையே மாவட்ட திறன் அலுவலர்கள் மற்றும் திட்ட நிர்வாகிகளுக்கான பயிற்றுநர் பயிற்சி மற்றும் தொழில் வழிகாட்டல் பயிற்சி திட்டத்தை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.

இத்திட்டம் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் தொழில் வழிகாட்டல் சேவைகளின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தைக் கொண்டது. மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மாநில திட்டக்குழு இடையே United Nations Development Programme (UNDP) தொழில்நுட்ப ஆதரவுடன் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இக்கூட்டாண்மை, நிறுவன அமைப்புகளை வலுப்படுத்துதல், நிலையான செயற்பாட்டு நடைமுறைகள் உருவாக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த தொழில் வழிகாட்டுதல் ஆகியவற்றின் மூலம் அனைத்து திறனகங்களிலும் பயனுள்ள சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், இணை இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் விஜயா, திறன் பயிற்சி உதவி இயக்குநர் சித்ரா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.