Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் தீர்த்தவாரி

திருவள்ளூர், மே 1: திருவள்ளூர்  வைத்திய வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, கோயில் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றான 59வது திவ்ய தேசமான  வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றவும், நோய்தீர வேண்டிக் கொள்ளவும், நோயை தீர்த்த  வைத்திய வீரராகவ பெருமாளுக்கு வேண்டுதலை நிறைவேற்றவும் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து,  வைத்திய வீரராகவ பெருமாளை வணங்குவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டு  வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 22ம் தேதி தொடங்கி மே 1ம் தேதியான இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்த, சித்திரை பிரம்மோற்சவ விழாவானது கடந்த 22ம் தேதி காலை 4.15 மணியளவில் த்வஜாரோஹனம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு, 5.30 மணியளவில் தங்க சப்பரம் புறப்பாடும், 11 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7 மணியளவில் சிம்ம வாகனத்தில் வீரராகவர்,  தேவி - பூதேவியுடன் வீதி புறப்பாடு நடைபெற்றது. கடந்த 23ம் தேதி காலை 5 மணியளவில் ஹம்ச வாகனத்தில் வீதி புறப்பாடும், 9.30 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7 மணியளவில் சூரிய பிரபை புறப்பாடும் நடைபெற்றது. 24ம் தேதி காலை 4 மணியளவில் கருட சேவையும், கோபுர தரிசனமும், காலை 6 மணியளவில் வீதி புறப்பாடும், மாலை 3 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7.30 மணியளவில் அனுமந்த வாகனத்தில் வீதி புறப்பாடும் நடைபெற்றது.

அதேபோல், கடந்த 25ம் தேதி காலை 5 மணியளவில் சேஷ வாகனத்தில் புறப்பாடும், 10 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7 மணியளவில் சந்திர பிரபையும், 26ம் தேதி காலை 4 மணியளவில் நாச்சியார் திருக்கோலமும், 10.30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணியளவில் யாளி வாகனத்தில் வீதி புறப்பாடும், 27ம் தேதி காலை 5 மணியளவில் வேணுகோபாலன் திருக்கோலமும், சூர்ணாபிஷேகமும், 6 மணிக்கு வெள்ளி சப்பரமும், 10.30 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7 மணியளவில் யானை வாகனமும் நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த 28ம் தேதி காலை 5.15 மணியளவில் தேவி - பூதேவி சமேததராய்  வைத்திய வீரராகவ பெருமாள் தேருக்கு எழுந்தருளுதலும், காலை 7.30 மணியளவில் தேர் புறப்பாடும் நடைபெற்றது.

மாலை 6.30 மணியளவில் தேவி, பூதேவி சமேததரராய்  வைத்திய வீரராகவ பெருமாள் தேரிலிருந்து எழுந்தருளுதலும், திருமஞ்சனமும், இரவு 9.30 மணியளவில் சுவாமி கோயிலுக்கு எழுந்தருளும் நடைபெற்றது. மேலும், 29ம் தேதி காலை 9.30 மணியளவில் திருமஞ்சனமும், மாலை 3 மணியளவில் திருப்பாதம் சாடி, திருமஞ்சனமும், இரவு 7.30 மணியளவில் குதிரை வாகனமும், 30ம் தேதியான நேற்று காலை 4 மணியளவில் ஆள்மேல் பல்லக்கு நடைபெற்றது. தொடர்ந்து காலை 10.30 மணியளவில் தீர்த்தவாரியும், இரவு 7.30 மணியளவில் விஜயகோடி விமானமும் நடைபெற்றது.மே 1ம் தேதியான இன்று காலை 9 மணியளவில் திருமஞ்சனமும், 10.30 மணியளவில் துவாதச ஆராதனையும், இரவு 9 மணியளவில் கண்ணாடி பல்லக்கும், 11.30 மணியளவில் த்வஜ அவரோகணமும் நடைபெறுகிறது. பிரம்மோற்ச விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட்  ரங்கநாதன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்கள், கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.