திருத்தணி, அக்.28. திருத்தணி அருகே கிராமத்திற்கு செல்லும் மண் சாலையை சீரமைக்க கோரி பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி அடுத்த கிருஷ்ணசமுத்திரம் காலனியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிருஷ்ண சமுத்திரம் பிரதான சாலைக்கு வந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகளில் சென்று வருகின்றனர்.
கிருஷ்ண சமுத்திரம் பிரதான சாலையில் இருந்து கிருஷ்ண சமுத்திரம் காலனிக்கு செல்லும் மண் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் தெருவிளக்குகள் இல்லாததால் அச்சாலையில் இரவு சென்று வர பொதுமக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைக்கு மண் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளதால், அச்சாலையில் சென்று வர முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் மண் சாலையை சீரமைக்க கோரி கிருஷ்ணசமுத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே திருத்தணி-பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
மாணவர்களுக்கு ஆதரவாக கிராம மக்களும் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து ஒரு மணி நேரம் காலதாமதமாக திருத்தணி காவல் ஆய்வாளர் சிவகுமார், வட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.மேலும் மண் சாலை சீரமைக்க வேண்டும் என்ற கிராமமக்கள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதை ஏற்று சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


