Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாலங்காடு காவல் நிலையம் முன்பு துருப்பிடித்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள்

திருத்தணி, ஜூலை 9: திருவாலங்காடு காவல் நிலையத்தில் உரிய பராமரிப்பின்றி குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். திருவாலங்காடு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகள் மற்றும் விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீசார் அவற்றை முறையாக பாதுகாத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நீண்ட காலம் நடப்பதாலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் உரிமை கோர யாரும் வராததால் ஏராளமான வாகனங்கள் திருவாலங்காடு காவல் நிலையம் எதிரில் காவலர் குடியிருப்பு பகுதியில் குப்பை போல் குவித்து வைத்துள்ளனர். மேலும் உரிய பராமரிப்பின்றி இருசக்கர வாகனங்களை செடி கொடிகள் சூழ்ந்துள்ளதால் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.  எனவே, குடியிருப்பில் வசித்து வரும் காவலர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தவும் இருசக்கர வாகனங்கள் பயனற்று வீணாவதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.