Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

10, 12ம் வகுப்புகளில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வு கூட்டம்

திருவள்ளூர், நவ. 14: மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காலாண்டு தேர்வில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சி விகிதம் குறைவு பெற்ற பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் 50 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அதன் விவரம்பின்வருமாறு: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு தினமும் வருவதை உறுதி செய்திட வேண்டும். தினந்தோறும் மாணவர்களுக்கு சிறு தேர்வு மற்றும் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களிடையே கற்கும் திறன் குறைந்த விபரத்தை தலைமை ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அவர்களுக்கு புரியும் விதமாக நடத்தி வகுப்பின் இறுதியில் பாடத்தின் சுருக்கத்தை கூற வேண்டும்.

12ம் வகுப்பு அனைத்து மாணவர்களுக்கும் தினந்தோறும் தமிழ், கணிதம், வணிகவியல், கணக்கியல் , பொருளியல் ஆகிய பாடங்களில் வீட்டுத் தேர்வு அளிக்க வேண்டும். இதில் கண்டிப்பாக தமிழ் மற்றும் கணிதம் இடம் பெற்றிருக்க வேண்டும். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 நாட்கள் தமிழ், 4 நாட்கள் கணிதம், 2 நாட்கள் வரலாறு மற்றும் புவியியல், தலா ஒரு நாட்கள் பொருளியல் மற்றும் குடிமையியலும் வீட்டு தேர்வாக அளித்திட வேண்டும். ப்ராஜெக்ட் புன்னகை என்ற திட்டத்தில் மாணவர்களிடையே பல் பாதுகாப்பு தொடர்புடைய உரிய படிவங்களை உடனடியாக மாணவர்களிடம் பெற்று முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நூலகத்திற்கு வரவழைத்து கற்றல் திறனை வளர்க்க பயன்படுத்த வேண்டும். மேலும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மை குழு மூலம் வேலைவாய்ப்பு அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு பணியிடங்களை முதன்மை கல்வி அலுவலர் நிரப்ப வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அறிவுறுத்தினார். இதில் முதன்மை கல்வி அலுவலர் பி.ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வராணி, உதவி திட்ட அலுவலர்கள் ரவி, அரவிந்தன், மோகனா சாஹில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கல்வி) பவானி மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.