Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வடசென்னையில் சிஎம்டிஏ சார்பில் ரூ.65 கோடியில் 7 சமுதாய நலக்கூடங்கள்: 2025 டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

மாதவரம்: வடசென்னை பகுதியில் சிஎம்டிஏ சார்பில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் 7 சமுதாய நலக்கூடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2025 டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து சமுதாய நலக்கூடங்களும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நியூ ஆவடி சாலை, காந்தி நகரில் ரூ.85.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்துபட்டு, ஹாரிங்டன் சாலையில் சிஎம்டிஏ சார்பில் ரூ.10 கோடியில் கட்டப்படவுள்ள சமுதாய நலக்கூடம், துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராயபுரம், கிளைவ் பேட்டரியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பழுதடைந்த பழைய குடியிருப்புகள், ஜார்ஜ் டவுன், பிராட்வே சாலை, பி.ஆர்.என் கார்டனில் ரூ.85.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், எல்லீஸ்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் ஆகியவற்றை அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சார்பில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் வடசென்னை பகுதியில் 7 சமுதாய நலக்கூடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வால்டாக்ஸ் ரோடு, தண்ணீர் தொட்டி தெருவில், திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதியில் கொன்னூர் நெடுஞ்சாலையில், சந்திரயோகி சமாதியில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் சென்ட்ரல் அவென்யூ, திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில், மாதவரம் சட்டமன்ற தொகுதி, புழல் விளாங்காடுபாக்கம் ஆகிய பகுதிகளில் 6 சமுதாய நலக்கூடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் ஒரு சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருகிறது.

எழும்பூர் சட்டமன்ற தொகுதி, சேத்துபட்டு, ஹாரிங்டன் சாலையில் சிஎம்டிஏ சார்பில் ரூ.10 கோடியில் சமுதாய நலக்கூடம் கட்டப்படவுள்ளது. 2025 டிசம்பர் மாதத்திற்குள் இவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, காந்தி நகரில் சிதலமடைந்த பழைய குடியிருப்புகளை இடித்து ரூ.85.54 கோடி மதிப்பீட்டில் 500 எண்ணிக்கையிலான குடியிருப்புகளும் மற்றும் ஜார்ஜ் டவுன், பிராட்வே சாலை, பி.ஆர்.என் கார்டனில் சிதலமடைந்த பழைய குடியிருப்புகளை இடித்து ரூ.85.68 கோடி மதிப்பீட்டில் 504 எண்ணிக்கையிலான குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகிறது.

ராயபுரம் கிளைவ் பேட்டரியில் சிதலமடைந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய குடியிருப்புகளையும் மற்றும் எல்லிஸ்புரத்தில் சிதலமடைந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய குடியிருப்புகளையும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பிரபாகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். சிதலமடைந்த அனைத்து குடியிருப்புகளையும் மறுகட்டுமானம் கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வுகளின்போது வில்லிவாக்கம் எம்எல்ஏ வெற்றி அழகன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பிரபாகர், மண்டலக்குழு தலைவர்கள் கூ.பீ.ஜெயின், ஸ்ரீராமலு, சிஎம்டிஏ தலைமை திட்ட அமைப்பாளர் ருத்ரமூர்த்தி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கண்காணிப்பு பொறியாளர் இளம்பருதி, சிஎம்டிஏ கண்காணிப்பு பொறியாளர் ராஜமகேஷ்குமார், செயற்பொறியாளர் விஜயகுமாரி, மண்டல அலுவலர்கள் சுரேஷ், பரிதா பானு, மாமன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி, ஆசாத், பரிமளம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.