Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்; தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

திருவள்ளூர்: தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.நல்லதம்பியை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று திருவள்ளூரில் வாக்கு சேகரித்தார்.  திருவள்ளூருக்கு வருகை தந்த பிரேமலதா விஜயகாந்த்தை முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா, முன்னாள் எம்பி பி.வேணுகோபால், தேமுதிக மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: நமது வேட்பாளர் கு.நல்லதம்பி உண்மையானவர்.

கேப்டனின் பிள்ளையாக வளர்த்தவர். அதனால் தான் 2011ல் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தவர் கேப்டன். அதனால் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கேப்டன் விசுவாசத்திற்காக நல்லதம்பிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேப்டன் ஆசிர்வாதம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆசீர்வாதத்தோடு திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். டெல்லியில் இவரது குறல் எதிரொலிக்க நீங்கள் கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பொதுச் செயலாளராகவும், கேப்டன் மறைவிற்குப் பின் பிரேமலதா ஆகிய நான் பொதுச் செயலாளராகவும் ஆகி இருவரும் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். எத்தனையோ நிர்பந்தங்கள், எத்தனையோ மிரட்டல்கள், எத்தனையோ தடைகளையும் தாண்டி இந்த கூட்டணி அமைந்துள்ளது.

இந்த தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல். இந்த தேர்தலில் நாம் வெற்றி கண்டே தீர வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளாக, திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை விரிவுபடுத்தி நவீனப்படுத்தப்படும். அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். அதே போல் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் சுற்றுலாத் தளமாக அறிவித்தும் சீரமைக்கப்படாமல் இருப்பதால் அதனை சீரமைத்து திருவள்ளூர் மாவட்டம் வளர்ச்சியடைய நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் பழவேற்காடு முகத்துவாரம் தூர்வாரப்படும். எனவே கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களி்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரச்சாரத்தின் போது அதிமுக, தேமுதிக, புரட்சிபாரதம், எஸ்டிபிஐ உள்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.