திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட அளவிலான ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் கருத்தரங்கு மற்றும் டிஜிட்டல் தேவைகள் தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் பேசுகையில், இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு என்ற குறியீடுகளை மருத்துவமனை மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் சுகாதார குறியீடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, ஓசூர், ஆவடி என 3 இடங்கள் மைக்ரோசைட்டாக (நுண் பகுதி) தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நம் மாவட்டத்தில் ஆவடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இந்த சுகாதார குறியீடுகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை பணியாளர்கள் பதிவு செய்திட வேண்டும். அதாவது மருத்துவ பணியாளர்கள் பதிவேடு மற்றும் மருத்துவமனைகள் பதிவேடு இரண்டையும் சுகாதாரக் குறியீடுகளில் பதிவு செய்திட வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பதிவிடும் சுகாதார குறியீடுகளை ஒப்பிடாமல் வளர்ந்து வரும் நாடுகளைப் போல சுகாதார குறியீடுகளை பதிவு செய்து விட வேண்டும். ஏனென்றால் சுகாதாரத் துறையில் இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறப்பானதொரு நிலையில் நாம் உள்ளோம்.
எனவே சுகாதாரக் குறியீடுகளை சுணக்கம் இல்லாமல் பதிவேற்றம் செய்திட வேண்டும். அதாவது திருவள்ளுர் மாவட்டம் 100 சதவீதம் சுகாதார குறியீட்டை பதிவு செய்த மாவட்டமாக இருந்திட வேண்டும் என்றார். தொடர்ந்து, சுகாதாரக் குறியீடுகளை சிறப்பாக பதிவேற்றம் செய்த மருத்துவர்களுக்கு கேடயம் மற்றும் பொன்னாடைகளை கலெக்டர் வழங்கி கவுரவித்தார். இதில் மாவட்ட சுகாதார அலுவலர்கள் திருவள்ளூர் பிரியா ராஜ், பூந்தமல்லி பிரபாகரன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, ஆவடி மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், குடும்ப நல துணை இயக்குநர் சேகர், கிராமோதயா தொண்டு நிறுவனர் தலைவர் உமா ரவிகுமார், குழுவின் தலைவர் சிவகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

