Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாம்பாக்கம் கிராமத்தில் கிடப்பில் போடப்பட்ட சமுதாயக்கூட கட்டுமான பணி: நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு

ஊத்துக்கோட்டை, ஜூன் 3: ஊத்துக்கோட்டை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் சமுதாயக்கூட கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், கூடுதல் நிதி ஒதுக்கி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் மக்கள் மனு அளித்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியத்தில் மாம்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாம்பாக்கம் பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம், நிச்சயதார்த்தம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, திருவள்ளூர் போன்ற பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களை நாட வேண்டியிருந்தது. அவ்வாறு நடத்துவதற்கு அதிக அளவில் வாடகை பணமும் கொடுக்க வேண்டி இருந்தது. இதனால், மாம்பாக்கம் கிராம பகுதியில் சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து கடந்த 2023-2024ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சம் ஒதுக்கினார்.

அந்த தொகையில் இருந்து சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஆனால் சமுதாய கூட பணிகள் பாதியிலேயே நிற்கிறது. இன்னும் தரை போடப்படாமலும், மின் இணைப்பு கொடுக்கப்படாமலும் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையே நீடிக்கிறது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் நீலவானத்து நிலவன் மற்றும் கிராம மக்கள் திருவள்ளூர் கலெக்டர் கவிதாவிடம் சமூக நலக்கூட பணிகளை தொடர்வது தொடர்பாக மனு அளித்தனர்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: எங்கள் கிராமமான மாம்பாக்கத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு முன்னாள் எம்பி ஜெயக்குமாரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சம் ஒதுக்கினார். ஆனால் சமுதாயக்கூடத்தை முழுமையாக கட்டி முடிக்க அந்த நிதி போதவில்லை. ஆகையால் பணிகளை தொடர்ந்து செய்து முடிக்க மேலும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.