கம்பம், அக். 29: சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து 2 நாட்களுக்குப் பிறகு, குளிக்க வனத்துறையினர் அனுமதியளித்ததால் சுற்றுலாப் பயணிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கம்பம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சுருளி அருவி அமைந்துள்ளது. சிறந்த சுற்றுலாத் தலமாகவும், புண்ணியஸ்தலமாகவும் திகழ்கிறது.
விடுமுறை நாட்களில் இந்த அருவிக்கு தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு ஊர்களிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேகமலை, தூவானம் அணை, அரிசிப்பாறை, மற்றும் ஈத்தகாடு ஆகிய வனநீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு மழை குறைந்தது. இதனால் சுருளி அருவிக்கு நேற்று காலை முதல் நீர்வரத்து சீரானது. இதனையடுத்து பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


