ஆண்டிபட்டி, அக். 17: ஆண்டிபட்டி அருகே, பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் மாணவ-மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் தேங்கியுள்ளது.
இதனால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, பள்ளிக்கு வந்த 72 மாணவ, மாணவிகள் அருகே உள்ள அரசு உயர்நிலை பள்ளி கட்டிடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


