சின்னமனூர், அக். 16: சின்னமனூர் அருகே சீலையம்பட்டி சமத்துவத்தில் வசிப்பவர் பாண்டி. இவரது மகன் முருகன் (20), ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது ஆட்டோவை வீட்டிற்கு முன் நிறுத்தியிருந்தார். பின்னர் அதிகாலை எழுந்து பார்த்தபோது ஆட்டோ திருடுபோனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன், சின்னமனூரின் பல்வேறு பகுதிகளிலும் ஆட்டோவை தேடினார். அப்போது திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், இவரது ஆட்டோவை ஒருவர் ஓட்டிச்செல்வது தெரியவந்தது.
அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கிப்பிடத்த முருகன், சின்னமனூர்
காவல் நிலையத்தில் ஆட்டோவுடன் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், ஆட்டோவை திருடிய நபர் தேனி, அரண்மனை புதூர் பகுதியைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் கவுதம் (20) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார், கவுதமை கைது செய்தனர். திருடப்பட்ட ஆட்டோ, அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.


