2ம் போக நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் பாவும் பணி தீவிரம்
சின்னமனூர், நவ. 15: சின்னமனூர் பகுதியில் இரண்டாம் போகம் குறுவை பருவத்திற்கான நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் பாவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 15,000 ஏக்கர் வயல்வெளி பரப்புகளில் வருடம் இரு போகம் நெல் சாகுபடி விவசாயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தை அடுத்து இரண்டாம் நெற்களஞ்சியத்திற்கு பெரியாற்றில் வழக்கம் போல் ஜூன் முதல் தேதியில் பாசனநீர் திறக்கப்படுவதால் தொடர்ந்து 2026 மார்ச் வரையில் உணவு உற்பத்தி செய்ய சாத்தியமாகுகிறது.
இந்நிலையில் கடந்த ஜூன் 25ம் தேதி நடவுப் பணியை துவங்கிய நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கிடையே நெற்பயிரை வளர்த்தெடுத்து அக்டோபர் இறுதியில் அறுவடை துவங்கி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கூழையனூர், துரைச்சாமிபுரம், குச்சனூர், மார்க்கையன்கோட்டை, வேம்படிகளம், கருங்கட்டான் குளம் பரவு, பெருமாள் கோயில் பரவு ஆகிய பகுதிகளில் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த கட்டமாக 2ம் போகத்திற்கான குறுவை சாகுபடிக்காக வயல்வெளிகளில் விவசாயிகள் நெல் விதைகளை விதைத்து நாற்றங்கால் பாவும் பணியை விவசாயிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.