தேனி, அக். 15: தேனி மாவட்டத்தில் 17 வயது கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது . தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் தாலுகா பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கல்லூரியில் படித்து வந்தார். இவரை காதலிப்பதாக கூறி காளீஸ்வரன் (19) என்பவர் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதையறிந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் அழைத்து விசாரித்தபோது, இனிமேல் மாணவியுடன் பேசமாட்டேன் என காளீஸ்வரன் கூறியுள்ளார். ஆனால் மீண்டும் அவருடன் நெருங்கி பழகிய வாலிபர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து காளீஸ்வரனை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தேனி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் ரக்சிதா ஆஜரானார். விசாரணை முடிவில், குற்றச்சாட்டுகள் உறுதியானதால் காளீஸ்வரனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எழில் நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட மாணவியின் நலனைக் கருத்தில் கொண்டு, அவருக்கு தமிழ்நாடு அரசு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


