கூடலூர், அக். 14: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பீருமேடு தாலுகாவுக்கு உட்பட்ட குட்டிக்கானம் - மேகமலைக்கு இடையே சாலையோரத்தில் சிறுத்தைக் குட்டி ஒன்று நேற்று முன்தினம் இரவு மர்மமாக இறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், இடுக்கி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தைக் குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.
சிறுத்தை குட்டி வாகனத்தில் அடிபட்டு இறந்ததா அல்லது தவறி விழுந்ததில் அடிபட்டு இறந்ததா என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். குட்டி இறந்ததால் இப்பகுதியில் தாய் சிறுத்தையின் நடமாட்டம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


