கூடலூர், நவ.13: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகின்றன. மொத்தம் 152 அடி உயரமுள்ள இந்த அணையில் கடந்த நவ.1ம் தேதி நீர்வரத்து 1515.27 கனஅடியாகவும், அணை நீர்மட்டம் 137.85 அடியாகவும் இருந்தது. இதை தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், அணைக்கு நீர்வரத்து மறுநாளே 332.73 அடியாக சரிந்தது.
தொடர்ந்து மழை இல்லாததால், அணையின் நீர்வரத்து 1000 கனஅடிக்கும் குறைவாக இருந்தது. நேற்று முன்தினம் காலை அணைக்கு நீர்வரத்து 655.61 கனஅடியாகவும், நீர்மட்டம் 134.40 அடியாகவும் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1183.57 கனஅடியாகவும், நீர்மட்டம் 134.20 அடியாகவும் உள்ளது. அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 1722.92 கனஅடி. அணையின் மொத்த நீர் இருப்பு 5679.60 மில்லியன் கனஅடி. அடுத்தடுத்த நாட்களில் அணைப்பகுதியில் மழைக்கான வாய்ப்பு உள்ளதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
