உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு கூடுதல் தலைமை பொறுப்பு ஒதுக்கீடு
மூணாறு, நவ.13: கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு கூடுதல் தலைமை பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ளாட்சி தேர்தல், டிச.9 மற்றும் டிச.11ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் உள்ளாட்சி அமைப்புகளில் தலைமை பொறுப்புகளில் பெண்களுக்கு கூடுதல் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த முறை மக்கள் தொகையை பொறுத்து தலைமை பொறுப்பின் பிரிவு தேர்வு செய்யப்பட்டது. மாநிலத்தில் உள்ள ஆறு மாநகராட்சிகளில் மேயர் பொறுப்பில் பெண்களுக்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 14 மாவட்ட ஊராட்சிகளில், இடுக்கி உள்பட ஏழு மாவட்ட ஊராட்சிகளில் தலைவர் பொறுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
152 ஊராட்சி ஒன்றியங்களில், 77 ஊராட்சி ஒன்றியங்களிலும், 941 ஊராட்சிகளில் 471 ஊராட்சிகளில் தலைவர் பொறுப்பு பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டது. தேவிகுளம் ஊராட்சி ஆதிதிராவிடர் பெண்ணுக்கும் ஒதுக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி, தொடுபுழா நகராட்சி ஆகியவற்றில் தலைவர் பொறுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் நான்கும், 52 ஊராட்சிகளில் 26 ஊராட்சிகளிலும் தலைவர் பொறுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.