தேவதானப்பட்டி அருகே ஓடைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
தேவதானப்பட்டி, நவ. 12: தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டியில் உடைந்த ஓடைகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டி முருகமலையில் இருந்து எருமலைநாயக்கன்பட்டி மற்றும் சில்வார்பட்டி ஆகிய இரண்டு ஊர்களுக்கு மத்தியில் ஓடை, ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு செல்கிறது. கடந்த ஆண்டு பருவமழை அதிகளவு பெய்தது.
பருவமழை அதிகளவு பெய்ததால் ஓடைகள், ஆறுகள், வாய்க்கால்கள் என நீர்வரத்து பகுதி அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் தேவதானப்பட்டி முருகமலையில் இருந்து, ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு செல்லும் எருமலைநாயக்கன்பட்டி ஓடை சுமார் 10 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இந்த ஓடை உடைப்பினால் பல்வேறு பயிர் சாகுபடிகள் மழை வெள்ளநீரில் மூழ்கியது.
ஓடையில் உடைப்பு ஏற்பட்ட புகுந்த மழைநீர் சில விவசாய கிணறுகளுக்குள் புகுந்து கிணறு உடைப்பு ஏற்பட்டது. எருமலைநாயக்கன்பட்டி ஓடை உடைந்ததில் சில்வார்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் 10கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தனர். எனவே, எருமலைநாயக்கன்பட்டி மற்றும் சில்வார்பட்டி விளைநிலங்கள் வழியாக வேட்டுவன்குளம் கண்மாய்க்கு செல்லும் ஓடை உடைப்பை விரைந்து சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.