தேனி, நவ.5: தேனியில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று சின்னமனூர் நகராட்சியின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், சின்னமனூர், போடி, கம்பம் உள்ளிட்ட நகராட்சிகளில், தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்க உள்ள நிலையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு, தனியார் நிறுவனம் சம்பளம் வழங்காததை கண்டித்தும், தீபாவளி போனஸ் மற்றும் துப்புரவு பணிக்கு தேவையான தளவாட பொருட்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஒப்பந்த நிறுவனம் முறையாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தேனியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர். பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது.


