Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வருசநாடு அருகே கனமழையால் சாலைகள் துண்டிப்பு; கடும் அவதிக்குள்ளாகும் விவசாயிகள்

வருசநாடு: வருசநாடு அருகே மழையால் சாலைகள் பலத்த சேதமடைந்துள்ள நிலையில், புதிய சாலை அமைக்காமல் இருப்பதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்டவையாக காந்திகிராமம், முத்துநகர், ஐந்தரைபுலி உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர. இந்நிலையில் தற்போது பெய்த வடகிழக்க பருவமழையால் இப்பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் சிதிலடைந்துள்ளது, இந்த கிராமங்களை சுற்றிலும் உள்ள விவசாய நிலங்களில், பீன்ஸ், எலுமிச்சை, கொட்டை முந்திரி, இலவம் பஞ்சு உள்ளிட்ட விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிராமங்களுக்கு முறையான சாலை வசதி ஏதுமில்லை. இதன்படி சீலமுத்தையாபுரம் மேல் வாலிப்பாறை கிராமம் வரை மட்டும் தார் சாலை இருந்தது.

இதனால் காந்திகிராமம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சீலமுத்தையாபுரம்் வாலிப்பாறை கிராமத்தில் இருந்து அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு நடந்து செல்லும் நிலை காணப்பட்டது. மேலும் தார் சாலை வசதி இல்லாததால் விவசாயிகள் விளை பொருட்களை சந்தைக்கு அனுப்பி வைக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். மாட்டு வண்டிகளிலும், டூவீலர்களிலும் விளை பொருட்களை சீலமுத்தையாபுரம் கிராமம் வரை எடுத்து சென்று, பின்னர் அங்கிருந்து லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். இதனால் விவசாயிகள் உரிய நேரத்தில் விளைபொருட்களை சந்தைகளுக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை தொடர்ந்தது.

இதேபோல பள்ளி மாணவ, மாணவிகள் நாள்தோறும் 5 கிமீ வரை நடந்து செல்லும் நிலை காணப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் சீலமுத்தையாபுரத்திலிருந்து காந்திகிராமம் வரை புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் வனத்துறையினருடன் மாவட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்வாலிப்பாறை அடிவாரம் வரை புதிய தார்சாலை அமைக்க அனுமதி கிடைத்ததை அடுத்து அதற்கான பணிகள் நடைபெற்றது. இருப்பினும் அங்கிருந்து காந்திகிராமம் மலைக் கிராமத்திற்கு தார்சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

புதிய தார்சாலை அமைக்கும் பகுதியில் குறிப்பிட்ட தொலைவு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வருவதாக அவர்கள் தெரிவித்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தற்போது வரை தார்சாலை அமைக்க வனத்துறை அனுமதி வழங்கவில்லை. இதனால் காந்தி கிராமத்திற்கு தார்சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த கிராமத்தை சேர்ந்த ஆண்டி கூறுகையில், ‘‘பல வருட போராட்டத்திற்குப் பின்பு காந்தி கிராமத்திற்கு புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால் வனத்துறையினர் மீண்டும் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். தார்சாலை இல்லாததால் விளை பொருட்களை சந்தைக்கு அனுப்பி வைக்க மிகுந்த அவதிப்படும் நிலை உள்ளது.

இதேபோல காந்திகிராமம், மேல்வாலிப்பாறை உள்ளிட்ட கிராமங்களுக்கான ரேஷன் கடை, சுமார் 5 கிமீ தொலைவில் உள்ள வாலிப்பாறை கிராமத்தில் உள்ளது. அங்கு பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் அவற்றை தலைச்சுமையாக வீடுகளுக்குச் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் பொதுமக்கள் நடந்து செல்லும் மலைப்பாதை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனுடன் மழை பெய்யும் நேரங்களில் மாட்டுவண்டி, டூவீலர் போன்றவற்றிலும் பயணிக்க முடியாத நிலை உள்ளது. அது போன்ற நேரங்களில் விவசாயிகள் விளை பொருட்கள் சந்தைக்கு அனுப்பி வைக்க முடியாமல் அதிக அளவில் நஷ்டம் அடைகின்றனர்.

கடமலை மயிலை ஒன்றியத்தில் ஏராளமான கிராமங்களில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் காந்திகிராமத்திற்கு சாலை அமைக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட அதிகாரிகள் தற்போது வரை மேற்கொள்ளவில்லை. இது சம்பந்தப்பட்ட வனத் துறையினருடன் மாவட்ட நிர்வாகம் விரைவாக பேச்சுவார்த்தை நடத்தி காந்தி கிராமத்திற்கான நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தார் சாலை பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மழை சேதங்கள் ஏற்பட்டுள்ள மண் சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்’’ என்றார்.