ரூ.26 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார்
தேனி, செப். 30: தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில். ரூ.26 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். தேனியில் உள்ள கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கினார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கமலராஜன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள், மாதாந்திர உதவித்தொகை, மூன்று சக்கர வாகனம், சக்கர நாற்காலி, காதுக்கருவி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 56 மனுக்கள் மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கலெக்டரிடம் வழங்கப்பட்டன.
இம்மனுக்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 44 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 70 ஆயிரத்து 800 மதிப்பிலான செயற்கைக் கால்களை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


