Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாகன விபத்து அபாயம்;  குடிநீர் குழாய் சீரமைக்க உருவாக்கிய பள்ளங்கள்: மூடப்படாமல் இருப்பதால் ஆபத்து

கூடலூர், ஜூலை 30: கூடலூர் நகராட்சி லோயர்கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள், பணிகள் நிறைவடைந்தும் பல நாட்களாக மூடப்படாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூடலூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் பிரிவு சார்பில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குதல், பழைய இணைப்புகளை மாற்றுதல், சேதமடைந்த அல்லது உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளுக்காக சாலைகள், தெருக்களில் பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்கள் அகற்றப்பட்டு குழாய்கள் பதிக்கப்படுகின்றன. புதிய குடிநீர் இணைப்பு மற்றும் இதர பணிகளுக்காக நகராட்சி நிர்வாகம் விதிமுறைகளின்படி கட்டணமும் வசூலிக்கிறது.

மேலும், பணிகள் நிறைவடைந்த பிறகு தோண்டப்பட்ட இடங்களை உடனடியாக மூடி, சாலையை பழைய நிலைக்கு கொண்டு வருவது சம்பந்தப்பட்ட துறை மற்றும் ஒப்பந்ததாரர்களின் பொறுப்பாகும். ஆனால் சில பகுதிகளில் குழாய் பதிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் முடிந்தும், தோண்டப்பட்ட பள்ளங்கள் வாரக்கணக்கில் திறந்த நிலையிலேயே விடப்பட்டுள்ளன. இதனால் சாலைகள் தொடர்ந்து சேதமடைந்து, மழை பெய்யும் நேரங்களில் பள்ளங்கள் மேலும் விரிவடைந்து வாகனப் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.