Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பலமாக வீசும் பருவக்காற்று: காற்றாலைகளில் மின் உற்பத்தி தீவிரம்

ஆண்டிபட்டி, ஜூன் 30: தேனி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான ஆண்டிபட்டி, கண்டமனூர், காமாட்சிபுரம், ஆத்தங்கரைப்பட்டி, கோவிந்தநகரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது, தேனி மாவட்டப் பகுதிகளில் பருவக்காற்று வீசுவது வழக்கம். வழக்கமாக பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, மே மாத இறுதியில் தேனி மாவட்டத்தின் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசத்தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டு மே 16-ம் தேதியே அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் தேனி மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியில் இருந்தே தென்மேற்கு பருவக்காற்று அதிகளவு வீச தொடங்கியது.

பருவக்காற்று பலமாக வீச தொடங்கியது முதல் காற்றாலைகளில் மின்சார உற்பத்தியும் முறைப்படி தொடங்கியது. தற்போது கடந்த சில நாட்களாக ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் மிக பலமாக உள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் வீசும் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் வினாடிக்கு 8 மீட்டர் முதல் 10 மீட்டர் என்ற அளவில் உள்ளது. இந்த காற்று பகல் நேரத்தில் அதிவேகமாகவும், இரவு நேரத்தில் சற்று குறைந்த வேகத்திலும் காணப்படுகிறது. இதன் காரணமாக, சராசரியாக ஒரு காற்றாலையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் யூனிட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.