Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பொய்வழக்கு தாக்கல் செய்துள்ளதாகக்கூறி விசைத்தறி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம்: ஆண்டிபட்டியில் பரபரப்பு

ஆண்டிபட்டி, செப். 29: நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் நோக்கில் பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆண்டிபட்டியில் விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேனி - மதுரை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆண்டிபட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், கொப்பையம்பட்டி, எஸ்.எஸ்.புரம் மற்றும் முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் விசைத்தறி நெசவுத் தொழிலை மட்டுமே முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த சிலர் விசைத்தறி நெசவாளர்கள் மின்சாரம் மற்றும் ரக ஒதுக்கீட்டில் முறைகேடு செய்வதாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நெசவுத் தொழிலை சீரழிக்கும் நோக்கத்துடன், நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்து வழக்கு தாக்கல் ெசய்துள்ளோர் மீது, உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விசைத்தறி நெசவாளர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தரப்பிலான கோரிக்கையை வலியுறுத்தி, விசைத்தறி தொழிலாளர்கள் சார்பில் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவுத் தொழிலாளர்கள் நேற்று காலை ஒன்று திரண்டு ஆண்டிபட்டி நகர் வழியாக ஊர்வலமாக வந்தனர். அதைத்தொடர்ந்து, ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தேனி - மதுரை பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் தரப்பு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நெசவாளர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர்கள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட நெசவாளர்கள், சாலை மறியலைக் கைவிட்டனர். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் இணைந்து, ஆண்டிபட்டி தாலுகா அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

நெசவாளர்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக, தேனி - மதுரை பிரதான சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.