Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

கம்பம் மெட்டு மலைப்பாதையில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு அவசியம்: வன ஆர்வலர்கள் கோரிக்கை

கம்பம், செப். 29: கம்பம் மெட்டு மலைப்பாதையில், இரவு நேரங்களில் வனவிலங்குகள் விபத்தில் சிக்காமல் தடுக்கும் வகையில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் மலைப்பாதையாக கம்பம்மெட்டு மலைப்பாதை இருந்து வருகிறது. இந்த மலைப்பாதை, அடிவாரப் பகுதியில் இருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் உள்ள கம்பம் மேற்கு வனப்பகுதி வழியாக செல்கிறது. இங்கு சிறுத்தை, மிளா மான், காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளும், அரிய வகை பறவைகளும் உள்ளன.

கடந்த சில வருடங்களாக வனத்துறையின் கடுமையான சட்டங்கள் மற்றும் வனத்துறையின் கெடுபிடியால் வனவிலங்குகள் வேட்டை, காட்டுத் தீ உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குளின் பெருக்கமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மிளா வகை மான் இனங்கள் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாகவே கம்பம்மெட்டு மலைப்பாதையில் இரவு நேரங்களில் சாலையில் ஆங்காங்கே வலம் வருகின்றன. மான் மட்டுமின்றி காட்டு பன்றிகள், காட்டுபூனைகளும் வலம் வருகின்றன. மிளா வகை மான்களும் அதிகமாக உள்ளன.

இந்நிலையில் வனவிலங்குகள் இரவு நேரங்களில் சாலையை கடக்கும் போது, கனரக வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ``கம்பம்மெட்டு மலைப்பாதையில் மிளா வகை மான்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனிடையே நகர் விரிவாக்கம் காரணமாக விவசாய நிலங்கள் விளை நிலங்களாக மாறி வருகின்றன. இந்நிலையில் வாகன விபத்தால் வனவிலங்குகள் அழிவதை தடுக்கும் வகையில், கம்பம்மெட்டு மலைப்பாதையில் இரவு நேரங்களில் வாகனங்கள் இயக்குவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்’’ என்றனர்.