தேனி, ஆக. 29: தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா தொழில் முனைவோர்கள் மற்றும் ஓட்டல் முகவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்குவதையடுத்து இவ்விருது பெற விரும்புவோர் நாளைக்குள் (30ம் தேதி) விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் அறிக்கையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு முதல் சுற்றுலாத் துறையின் மூலம் அனைத்து சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா தொழில் முனைவோர்கள் மற்றும் ஓட்டல் முகவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன என சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை மூலம் தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயணபங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றலா ஊக்குவிப்பதற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், பல்வேறு சுற்றலாப்பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர், சிறந்த சிறப்பு சுற்றுலா நிறுவனம், சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் என 13 வகையான பிரிவுகளின்கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட விருதுகளுக்கு நாளைவருகிற 30.09.2026ம் தேதிக்குள் (www.tntourismawards.com) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர், தேனி அவர்களை நேரில் அல்லது 73977 15689 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.



