வருசநாடு, அக். 28: கண்டமனூர் பகுதியில் உள்ள வாரச்சந்தைகளுக்கு, வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். கண்டமனூர், கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் வாரச்சந்தைகளில், இப்பகுதிகளை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் காய்கறிகள் வாங்குவது வழக்கம். தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காய்கறி சாகுபடி தீவிரமாக நடக்கிறது. இங்கு விளையும் காய்கறிகள் சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்திற்கும் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். மேலும் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளிலும் பல்வேறு வகை காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததுடன், உரிய நேரத்தில் பருவமழை பெய்யாமல் போனதால் காய்கறி சாகுபடியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. தொடக்கத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருந்த நிலையில், அடுத்தடுத்த நேரங்களில் தொடர் மழை காரணமாக பூக்கள் உதிர்தல், நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், காய்கறி விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் தற்போது சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக அவற்றின் விலை கடந்த இரண்டு வாரமாக சந்தைகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன்படி கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை, பூண்டு, பீக்கங்காய், உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், காலிபிளவர் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் பலமடங்கு அதிகரித்து வருகிறது. இதனால் வாரச்சந்தைகளில் மக்கள் கூட்டம் குறையத்தொடங்கியுள்ளது. பொதுமக்கள் பலரும் வழக்கமான அளவைவிட குறைவான எடையில் காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர். இதற்கிடையே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் செடிகளில் இருக்கும் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்படும். எனவே அவற்றின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


