கம்பம், செப். 28: கம்பத்தில் உள்ள மீன் கடைகளில், அதிகாரிகள் சோதனை நடத்தியதில், 25 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் கடைக்காரர்களுக்கு அபாரதம் விதித்தனர். கம்பத்தில் உள்ள மீன் கடைகளில், வைகை அணை மீன்வள ஆய்வாளர் கவுதமன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் மற்றும் கம்பம் நகராட்சி பொது சுகாதாரப் பணியாளர்கள் இணைந்து ஆய்வு நடத்தினர். இதில் கம்பம் பகுதியில் உள்ள 10 மீன் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்களில் சுமார் 25 கிலோ கெட்டுப்போன மீன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் கிருமிநாசினி ஊற்றி அவற்றை அழித்தனர். மேலும் கெட்டுப்போன மீன்களை விற்பனைக்காக வைத்திருந்த 10 கடை உரிமையாளர்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ.8 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து கெட்டுப்போன மீன்களை விற்பனைக்காக வைத்திருந்தாலோ, பொதுமக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மீன்களை விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


