Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூணாறு அருகே ஆனையிறங்கல் அணையில் மீண்டும் படகு சவாரி தொடங்கப்படுமா?.. எதிர்பார்ப்பில் சுற்றுலாப்பயணிகள்

மூணாறு, மே 26: கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஆனயிறங்கல் அணையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள படகுகளும் பாழாகி வருகின்றன. இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு மற்றும் பூப்பாறைக்கு இடையே அமைந்துள்ளது ஆனையிறங்கல் அணை. மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணை, பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற இடமாகும். இங்கு ஹைட்ல் டூரிசம் சார்பில் சுற்றுலாப் படகுகள் இயக்கப்பட்டு வந்தன.

அணையை சுற்றிலும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் இருந்த நிலையில் அப்பகுதியில் அரிசி கொம்பன் ஆண்காட்டு யானை சுற்றித் திரிந்தது. அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்க உயர்மட்ட குழுவை கேரள உயர்நீதிமன்றம் நியமித்தது. அந்த குழு அணையை சுற்றி யானைகள் நடமாடுவதை கருத்தில் கொண்டு சுற்றுலா படகுகளுக்கு தடை விதிக்குமாறு பரிந்துரைத்தது. அக்குழுவின் பரிந்துரையின் பேரில், யானைகளின் வாழ்விடத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, 2023 ஜூலை 14 முதல் படகு சவாரிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்தத் தடையை நீக்கக் கோரி ஹைட்ல் டூரிசம் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சத்தமில்லாத ‘இ-படகுகளை’ இயக்கத் தயார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இயக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டுள்ள படகுகள் வெயிலிலும் மழையிலும் நனைந்து மெல்ல மெல்ல சேதமடைந்து வருகின்றன. இவற்றை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முயன்றும், பல்வேறு தரப்பு எதிர்ப்புகளால் அது சாத்தியப்படவில்லை.

சுற்றுலா சீசன் காலங்களில் நுழைவுக் கட்டணம் மற்றும் படகு சவாரி மூலம் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 1 லட்சம் வரை வருவாய் கிடைத்து வந்தது. தற்போது படகுகள் முடங்கியுள்ளதால், பராமரிப்புச் செலவு மற்றும் வருவாய் இழப்பு என அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், இப்பகுதியை நம்பியுள்ள சிறு வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நீதிமன்ற வழக்கை விரைந்து முடித்து, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மீண்டும் படகு சேவையைத் தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.