தேனி, செப். 25: தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை பொய்த்ததாலும், எல் நினோ தாக்கத்தாலும் வனப்பகுதிகள் அனைத்தும் மிகவும் காய்ந்து வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு, பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கோம்பை பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில் திடீரென காட்டுத் தீ பரவியது.
இதில் பல ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதிகள் எரிந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. தீ பரவுவதால், வனவிலங்குகள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறும் ஆபத்தும் உருவாகியுள்ளது. எனவே காட்டுத் தீயை விரைந்து அணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


