தேனி, செப். 25: தேனி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது. போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு நிலம் வழங்குவதற்காக, அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் சுப்பிரமணி, பொன்சங்கர், கிருஷ்ணசாமி ஆகியோரது நிலங்களை வாங்கினர். இந்த நிலங்களை அரசுக்கு வழங்கியதில் அரசு கொடுத்த நிதியானது போதுமானதாக இல்லை என்பதால் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என 3 பேரும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2005ல் அரசுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு சதுர அடிக்கு ரூ.7.40 வீதம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அரசு கடந்த 2011ல் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் கடந்த 2020ல் நீதிமன்றம், ஏற்கனவே நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, இழப்பீடுத் தொகையை தீர்ப்பளித்த நாள் முதலாக கணக்கிட்டு, அசல் மற்றும் வட்டியுடன் தரவேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி, சுப்பிரமணி, பொன்சங்கர், கிருஷ்ணசாமி ஆகியோருக்கு ரூ.55 லட்சத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அளிக்க வேண்டியிருந்தது. ஆனால், ஆதிதிராவிடர் நலத் துறை வழங்கவில்லை. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மூவரும் பெரியகுளம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுதல் மனுத்தாக்கல் செய்தனர்.


