தேனி, செப். 25: வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. போடி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (34). இவர் கடந்த ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது கடைக்குச் சென்று வீடு திரும்பிய சிறுமியின் தாய் நேரில் இதை பார்த்ததும் வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி எழில் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ரக்சிதா ஆஜரானார். வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து நேற்று நீதிபதி எழில் தீர்ப்பளித்தார். அதில் சுரேஷிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
+
Advertisement


