Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தேனி நகரில் அனைத்து தெருக்களிலும் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்

தேனி: தேனியில் உள்ள பல்வேறு துறை அரசு அலுவலகங்களிலும், வர்த்தக நிறுவனங்களிலும் கல்விச்சாலைகளிலும் மருத்துவமனைகளிலும் தேனி மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேனிக்கு அரசு அலுவலர்கள் தனியார் வணிக ஊழியர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் நோயாளிகளின் உறவினர்கள் என நாள்தோறும் தேனிக்கு பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தேனி நகரின் பிரதான பகுதிகளாக பெரியகுளம் சாலை, மதுரை சாலை, கம்பம் சாலை, பகவதி அம்மன் கோவில் தெரு, இடமால் தெரு, சுப்பன் தெரு, அல்லிநகரம் ஆகிய பகுதிகள் வர்த்தக ரீதியாக முக்கியமான பகுதிகளாக உள்ளன. இந்நிலையில் தேனி நகரில் மொத்தம் உள்ள 33 வார்டுகளிலும் கடந்த சில மாதங்களாக நகராட்சியின் சுகாதாரப் பிரிவினர் முறையாக தூய்மை பணிகளை மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது.

நகரின் போக்குவரத்து மிகுந்துள்ள பகுதிகள் மட்டுமல்லாமல் அனைத்து தெருக்களிலும் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் உடனடியாக நகராட்சி சுகாதார வாகனங்களின் மூலமாக அப்புறப்படுத்தப்படாமல் ஆங்காங்கே வீதிகளில் கொட்டி சேகரித்து வைக்கப்படுகிறது. இதன் காரணமாக தேனி நகரில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் குப்பைகள் மலை போல் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. பள்ளிகள் மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் உள்ள இடங்களில் கூட மலை போல் குப்பைகள் குவிக்கப்பட்டு கிடக்கின்றன. மேலும் கழிவுநீர் ஓடைகளிலும் முறையாக கழிவுநீர் அப்புறப்படுத்தாமல் உள்ளதால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கழிவு நீர் ஓடைகளில் கழிவு நீர் தேங்கி வெளியேற வழி இல்லாமல் சாலைகளில் வழியும் அவலம் தொடர்ந்து உள்ளது.

ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக கூடி குப்பைகளை கிளறுவதும், அச்சமயங்களில் சாலைகளை நடந்தும் இரு சக்கர வாகனங்களில் பயணித்தும் செல்வோர் மீது தெருநாய்கள் விரட்டிச் சென்று கடிக்கும் அவலமும் தொடர்ந்து வருகிறது . தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளின் துர்நாற்றம் குப்பைகளுக்கு அருகே குடியிருக்கும் குடியிருப்பாளர்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கி வருகிறது .

இதுகுறித்து நகராட்சி சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லாத நிலையே நீடித்து வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம், நகரில் குவிந்துள்ள குப்பைகளை சேகரித்து குவித்து வைக்க கூடாது எனவும் உடனடியாக நகர் பகுதியில் இருந்து குப்பைகளை வாகனங்களில் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர் .