தூக்கமின்மை, மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்டவை நினைவாற்றலை பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவரின் பெயர் நினைவுக்கு வராமல் போவது, பொருட்களை எங்கு வைத்தோம் என்பதை மறந்துவிடுவது, ஒரு விஷயத்தை நினைவுகூர சிறிது நேரம் எடுத்துக்கொள்வது போன்றவற்றை உடனடியாக முதுமைக்கால மறதி நோயான (டிமென்ஷியா- Dementia) எனக் கருத வேண்டியதில்லை. வயது அதிகரிப்பது மட்டுமின்றி, தூக்கமின்மை, மனச்சோர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, 2021ம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 5.7 கோடி பேர் டிமென்ஷியா பாதிப்புடன் வாழ்ந்துள்ளனர். ஆண்டுதோறும் புதிதாக சுமார் 1 கோடி பேருக்கு டிமென்ஷியா பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அல்சைமர் நோய் மட்டும் 60 முதல் 70 சதவீதம் வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் முதியவர்களிடையே டிமென்ஷியா பாதிப்பு அதிகரித்து வருகிறது.


