Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆண்டிபட்டி நகர் முக்கிய சாலைகளில் வேகத்தடையும் இல்ல... பேரிகார்டும் இல்ல...

ஆண்டிபட்டி, ஜூன் 23: ஆண்டிபட்டி நகரில் வைகை அணை சாலை மற்றும் தேனி - மதுரை நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை மற்றும் பேரிக்கேட்டுகள் அமைத்து விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தின் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள ஆண்டிபட்டி நகரில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து தேனி - மதுரை நெடுஞ்சாலை, வைகை அணை சாலை, தெப்பம்பட்டி, ஏத்தக்கோவில் மற்றும் வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளுக்கு முக்கிய சாலைகள் பிரிகின்றன.

ஆபத்தான நால்ரோடு சந்திப்பு

குறிப்பாக, வைகை அணை சாலையில் ஏராளமான குடியிருப்புகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன. சக்கம்பட்டி அருகே உள்ள நால்ரோடு சந்திப்பு வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்தப் பகுதியில் சார்-பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளதால் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். ஆனால், இங்கு வேகத்தடை இல்லாததால் டூவீலர்கள் மற்றும் கார்கள் அதிவேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. எனவே, இந்தப் பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பேரிகார்டு அவசியம்

அதேபோல், தேனி - மதுரை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சக்கம்பட்டி விஏஓ அலுவலகப் பகுதியில், நாள்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சாலையைக் கடக்கின்றனர். தேனியிலிருந்து ஆண்டிபட்டிக்குள் நுழையும் வாகனங்கள் இந்தப் பகுதியில் மிகுந்த வேகத்துடன் வருவதால், மக்கள் சாலையைக் கடக்க அச்சப்படுகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, சக்கம்பட்டி நுழைவுப் பகுதியில் போலீசார் பேரிகார்டுகள் அமைப்பதன் மூலம் வாகன வேகத்தை கட்டுப்படுத்த முடியும். பெரும் விபத்துகள் ஏதேனும் நேரிடும் முன், சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.