Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தேவாரம் சுற்றியுள்ள கிராமங்களில் இரவு பகலாக நடக்கும் மண் கொள்ளை?.. கண்டுகொள்ளாத அதிகாரிகள்

உத்தமபாளையம், ஜூன் 23: தேவாரம் சுற்றியுள்ள கிராமங்களில் தினந்தோறும் இரவு நாளாக மண் கொள்ளை நடப்பதாக விவசாயிகள் சராமரியாக புகார் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் தேவாரம், பொட்டிபுரம், தம்மிநாயக்கன்பட்டி, லட்சுமிநாயக்கன்பட்டி, டி.மீனாட்சிபுரம், பல்லவராயன்பட்டி, டி.சிந்தலைச்சேரி உள்ளிட்ட ஊர்களில் அதிகமான அளவில் கண்மாய்கள் குளங்கள் நிறைந்துள்ளன. இவை தவிர தனியார் கம்பெனிகளுக்கு சொந்தமான மண்வளம் மிக்க காலி நிலங்கள் அதிகமாக உள்ளன. இந்த நிலங்களை சுரண்டி இரவு பகலாக கொள்ளையடிப்பது தொடர்கிறது. குறிப்பாக ஜே.சி.பி. மூலம் அள்ளப்படும் மண் செங்கல் சூளை, மற்றும் பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்கு மெத்து மண்ணாக விற்பனை செய்யப்படுகிறது.

இதனை இங்குள்ள வருவாய்த்துறை, அதிகாரிகள் மற்றும் குளங்களை பராமரிக்கும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்வதில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஆனாலும் இரவு பகல் என்று பாராமல் வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் மண் கொள்ளை அதிக அளவில் தேவாரம் சுற்றியுள்ள பகுதிகளில் நடப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், கண்துடைப்பு நாடகத்திற்காக ஆங்காங்கே மண் திருட்டை தடுப்பது போல ஒரு யூனிட் மண்ணை டிராக்டருடன் பறிமுதல் செய்கின்றனர். ஆனால், முழுமையாக மண் திருட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதனால் தமிழக அரசுக்கு ரூ. பல கோடி இழப்பு ஏற்படுகிறது. மண் கடத்தலை உடனடியாக தடுக்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழக ஆட்சி நிர்வாகம் இதுவரை தேவாரம் பகுதிகளில் நடக்கும் மண் கொள்ளைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் (லெனினிஸ்ட்) கட்சியை சேர்ந்த இளையராஜா கூறும்போது, ‘‘தேவாரத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் குளங்கள், கண்மாய்கள் காலி நிலங்கள் என மண் கொள்ளையர்கள் எதையும் விட்டு வைப்பதில்லை. தினமும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில், மணல் கொள்ளை மண் திருட்டு நடக்கிறது.

இதனை அதிக விலைக்கு செங்கல் காளவாசல், மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு விற்பனை செய்கின்றனர். இதனை தடுத்து நிறுத்துவதற்கு வருவாய்த்துறை - காவல் துறை அதிகாரிகளிடம் புகார்களாக கொண்டு சென்றால் சம்பந்தப்பட்ட மனு குப்பைத் தொட்டிக்கு செல்கிறது. இது குறித்து உடனடியாக மாவட்ட கலெக்டர் சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.