தேனி, ஆக. 21: தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் விடுத்துள்ள அறிக்கையில், தேனி மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மை துறை அதிகாரிகளால் கடந்த 18ம் தேதி ஆய்வு செய்யப்பட்டது. இதில் பெரியகுளம் வட்டாரம், தென்கரை பிட்-1 வருவாய் கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் மதுமிதா ஆய்வு செய்தபோது, மானியத்தில் வழங்கப்படும் யூரியா மூட்டைகளை வேறு பைகளில் மாற்றி விற்பனைக்கு அனுப்ப முயன்றது தெரியவந்தது. இதையடுத்து உர மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. புகாரின்பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இதேபோன்று குமார் என்பவரது செட்டில் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) வேளாண்மை அலுவலர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு), தேனி வட்டார உர ஆய்வாளர் நிவேஷ், வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் உரிய உரம் விற்பனை மற்றும் இருப்பு வைப்பதற்கான உரிமம் மற்றும் கொள்முதல் விபரம் இல்லாமல் 311 மானிய விலை யூரியா மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக தேனி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்திற்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 1441 மெட்ரிக் டன் யூரியாவும், 732 மெட்ரிக் டன் டிஏபி உரமும், 833 மெட்ரிக் டன்., பொட்டாஷ் உரமும், 3,562 காம்ப்ளக்ஸ் உரமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சில்லரை உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு ஆதார் எண் உட்பட முழு முகவரியுடன் முறையாக பட்டியலிட்டு ரசீது வழங்கி விற்பனை செய்யவேண்டும். யூரியா உரத்தை பதுக்கல் செய்வதோ, அதிக விலைக்கு விற்பனை செய்வதோ சட்டத்துக்கு புறம்பானதாகும். அவ்வாறு கண்டறியப்பட்டால் அந்த சில்லரை விற்பனை நிலையத்தின் உரிமம் நிரந்தரமாக தடைசெய்யப்படுவதுடன், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


