Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

சின்னமனூர் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்

சின்னமனூர், ஜூலை 21: சின்னமனூர் - சீப்பாலக்கோட்டை சாலையில் உள்ள கோகுலம் காலனி பகுதியில் 8548 எண் கொண்ட டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மதுக்கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு, குடியிருப்புப் பகுதிகளில் அரைகுறை ஆடையுடனும், மயக்க நிலையிலும் உலா வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பெண்கள், மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், இக்கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றக் கோரி, தமிழக முதலமைச்சருக்குப் புகார் மனுக்களை அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், உத்தமபாளையம் தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏற்கனவே இங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. ஆனால், இரண்டு மாதங்கள் கடந்தும் மாவட்ட நிர்வாகம் கடை இடமாற்றத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பொதுமக்களும் இணைந்து இக்கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி, நேற்று காலை 11 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கே.பாலபாரதி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மெயின் ரோட்டிலிருந்து பேரணியாகத் திரண்டு டாஸ்மாக் கடையை நோக்கிச் சென்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போடி டி.எஸ்.பி முருகன் தலைமையிலான சின்னமனூர் போலீசார், பொதுமக்களைக் கடையை நெருங்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதனால், போராட்டக்காரர்கள் அனைவரும் பூட்டியிருந்த டாஸ்மாக் கடையின் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரும் டாஸ்மாக் மாவட்ட மேலாளரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க 3 மாத கால அவகாசம் கோரப்பட்டது. அதற்குள் உறுதியாகக் கடை இடமாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.