ஆண்டிபட்டி, செப். 17:ஆண்டிபட்டி அருகே உள்ள திருமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரபீக்சேக் (62). இவரது மனைவி ரபீயா பஷிரணி (60). இவர் கடந்த 14ஆம் தேதி சொந்த வேலை காரணமாக தேனிக்கு சென்றுள்ளார். பின்னர், ஆண்டிபட்டிக்கு ஆட்டோவில் திரும்பி வந்துள்ளார். திருமலாபுரம் விலக்கு பகுதியில் ஆட்டோவில் இருந்து இறங்கிய ரபீயா பஷிரணி, தேனி - மதுரை நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம், எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


