கூடலூர், செப். 17: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர் சரண். இவர் நேற்று முன்தினம் மாலை பள்ளி மைதானத்தை ஒட்டியுள்ள கட்டிடம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். பொதுமக்கள் மாணவரை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகலறிந்த குமுளி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சரணுடன் பயிலும் மூன்று மாணவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, விளையாட்டாக இரும்புக் கம்பியை சுழற்றியபோது தவறுதலாக சரணின் தலையில் அடித்துவிட்டதாக கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் கூறிய தகவல் உண்மையல்ல என்கின்றனர் போலீசார்.சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். மாணவர்களுக்கிடையே இருந்த முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததா அல்லது வேறு யாருக்கேனும் இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


