சின்னமனூர் / போடி, செப். 17: சின்னமனூர் மற்றும் போடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நிறுவி வழிபாடு நடத்தப்பட்ட சிலைகள், நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு இருவேறு ஆறுகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டத்தில் பக்தர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து இந்த விழாவை சிறப்பாக கொண்டாடினர். இதன்படி தேனி பகுதியில் சுமார் 205 சிலைகளும், பெரியகுளம் பகுதியில் 80, ஆண்டிபட்டி பகுதியில் 180, போடி பகுதியில் 285 சிலைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டன. இந்த இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இதன்படி பெரியகுளம் நகரில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட சிலைகள் அனைத்தும், 14ம் தேதி மாலை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பாம்பாறு அருகே ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின் அங்கிருந்து ஊர்வலமாக பெரியகுளம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு வராக ஆற்றில் கரைக்கப்பட்டது.
அடுத்ததாக தேனி பகுதியில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட சிலைகள் அரண்மனை புதூர் பெரியாற்றிலும், ஆண்டிபட்டி பகுதியில் இருந்த சிலைகள் வைகை அணை நீர் வெளியேறும் பாலம் பகுதியிலும், கடமலைக்குண்டு பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் வருசநாடு மூல வைகை ஆற்றிலும் 15ம் தேதி மாலை மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. இதற்கிடையே சின்னமனூர் நகர் மற்றும் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில், 225 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடுநடத்தப்பட்டது. இந்த சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதன்படி அலங்காரம்செய்யப்பட்ட சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு முத்தாலம்மன் கோயில் பகுதிக்கு வந்து சேர்ந்தன. பின்னர் அங்கிருந்து சீப்பாலக்கோட்டை சாலை, சின்னமனூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மார்க்கையன்கோட்டை பெரியாற்றில் கரைக்கப்பட்டன. இதற்கான பாதுகாப்பு பணிகளை எஸ்பி பிரவீன் கெளதம் தலைமையில் போலீசார் மேற்கொண்டனர்.
இதேபோல் போடிநாயக்கனூர் மற்றும் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், 40 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இந்த சிலைகள் அனைத்தும் நேற்று போடியில் உள்ள தேவர் சிலை பகுதிக்கு பல்வேறு வாகனங்களில் கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து காமராஜர் சாலை வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கொட்டகுடி ஆற்றில் கரைக்கப்பட்டன. இதற்கிடையே நேற்று முன்தினம் பெய்த கனமழையால், கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு, சிலைகளை கரைக்க வசதியாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்..


