சின்னமனூர், ஜூன் 15: தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்வி பயின்ற இளைஞர்களை சமூக வலைதளம் மூலமாக வெளி நாடுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், தரவு உள்ளீட்டாளர் வேலை, அதிக சம்பளம் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கிரிப்டோ கரன்சி மோசடி போன்ற சட்ட விரோத செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாக தகவல்கள் வருகிறது. வெளிநாடுகளுக்கு வேலை, கல்வி மற்றும் வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி போன்ற விவரங்களைச் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்.
உரிய விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை அல்லது குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்திய வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படி வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் பட்டியலை www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
