Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

தேனி, ஜூலை 14: வைகை அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் 61 கிராம விவசாயிகளின் நலன் கருதி அணையில் இருந்து மாதம் ஒரு முறை தண்ணீர் திறந்து விட வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். ஆண்டிபட்டி அருகே டி.அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட 61 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று, மாரியப்பன் தலைமையில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து கோரிக்கை மனுவினை கலெக்டர் வைத்திநாதனிடம் அளித்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, வைகை அணைக்கு கீழ் பகுதியில் வைகை கரையை ஒட்டிய 61 கிராம மக்கள் வைகை ஆற்றை நம்பி, வைகை கரையோரம் குடியேறி பல ஆண்டுகளாக விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம். வைகை அணையில் இருந்து பேரணை வரை இணைப்புக்கால்வாய் வெட்டியபோதும், மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு சென்ற போதும், எங்கள் நிலங்களை கையகப்படுத்திய போதும், வைகை ஆறு வறண்டு போகாமல் இருக்கவும், குடிநீர் மற்றும் சமூக தேவைகளுக்காக வைகை ஆற்றில் மாதம் இருண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் திறந்து விடப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

மேலும், இந்த உத்தரவாதத்தை நிறைவேற்றும் வகையில் மதுரை பொதுப்பணித்துறை முதன்மைப் பொறியாளரால் அரசிற்கு எடுத்துரைத்து, வைகை ஆற்றில் பாசன காலங்கள் அல்லாத சமயங்களில் அவ்வப்போது மாதம் இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் திறந்து விட அரசாணை உள்ளது. தற்போது வைகை ஆறு வறண்டு குடிநீர், கால்நடைகளுக்கான குடிநீர் மற்றும் சமூக தேவைகளுக்கான நீர் இன்றி மிகவும் இன்னலுக்கு உள்ளாகி வருகிறோம். எனவே, அரசாணையின்படி தேனி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 61 கிராம மக்கள் துயர் நீங்க தண்ணீர் திறந்து விடுவதற்கான அரசாணையினை நடைமுறைப்படுத்தி வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க கலெக்டர் உதவிட வேண்டும் என தெரிவித்தனர்.