நேபாளத்தில் சிக்கியோர் போலவே தமிழக அரசு எங்களையும் பாதுகாக்க வேண்டும்: வருசநாடு மலைக்கிராம மக்கள் வலியுறுத்தல்
வருசநாடு, செப். 8: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியோரை மீட்க நடவடிக்கை எடுத்தது போலவே, தேனி மாவட்டத்தில் தவிக்கும் எங்களையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று வருசநாடு மலைக்கிராம மக்கள் கூறியுள்ளனர். வில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் காரணமாக, வருசநாடு பகுதியில் உள்ள 98 மலைக் கிராம மக்களை வனத்துறை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆண்டிப்பட்டி தாலுகா பொண்ணன்படுகை ஊராட்சி காமன்வெல்லூர் மலைக் கிராமத்தில் வசிக்கும் மக்கள், வன உரிமைக்குழுவுடன் இணைந்து சிறப்பு கிராம சபை கூட்டத்தை நேற்று நடத்தினர். இதில் வனப்பகுதிகளில் வாழும் மக்கள் பட்டா பெறுவதற்கனா வழிமுறைகள் குறித்து வன உரிமைக்குழுவினர் விளக்கினர்.
இதையடுத்து அனைத்து கிராமங்களிலும் புதிதாக வன உரிமை குழுக்கள் தேர்வு ெசய்யப்பட்டன. பின்னர் சிறப்பு கிராமசபை கூட்டத்தில், மலைக்கிராம மக்களை வெளியேற்றும் பிரச்னையில், உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு விரைவில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். மலைக் கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளுக்கான திட்டப்பணிகளை தமிழக அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கூறும்போது, ‘நேபாளத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கு அமைச்சர்கள் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. அப்படி இருக்கும்போது, தமிழகத்தில் உள்ள 98 மலை கிராமங்களில் வசிக்கும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. வனத்துறையினர் எங்களுக்கு பல்வேறு தொந்தரவுகளை அளித்து வருவகின்றனர். இந்த பிரச்னையில் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


