ஆண்டிபட்டி, செப். 8: ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மேரா யுவ பாரத் சார்பில், விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2027 தேசிய அளவில் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்வின் மூலம் நாட்டின் இளைஞர்களின் திறமை, தலைமைத்துவம். புதுமை சிந்தனை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தி, வளர்ந்த இந்தியா 2047 என்ற இலக்கை அடைவதில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதே முக்கிய நோக்கமாகும். இதையொட்டி விக்சித் பாரத் போட்டியின் கீழ் வினாடி வினா, கட்டுரை மற்றும் விளக்கக்காட்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மேலும், நாட்டுப்புற நடனம், நாட்டுப்புறப் பாடல், ஓவியம், பேச்சுப் போட்டி மற்றும் கவிதை எழுதுதல் உள்ளிட்ட கலை சார்ந்த போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. புதுமை, தொழில் முனைவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் பண்பாடு மற்றும் இளைஞர் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கும் இந்நிகழ்வில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதனையொட்டி வரும் செப்.30ம் தேதி வரை விக்சித் பாரத் வினாடி வினா போட்டி முதற்கட்டமாக நடைபெற உள்ளது.
இதில் 17.8.2026 அன்று 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்கத் தகுதியுடையவர்கள் ஆவர். ஆர்வமுள்ள இளைஞர்கள் mybharat.gov.in இணையதளம் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம். ஏற்கனவே மேரா யுவ பாரத் தளத்தில் பதிவு செய்துள்ளவர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை. எனவே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்று தங்களது திறமை மற்றும் புதிய சிந்தனைகளை தேசிய அளவில் வெளிப்படுத்தி விக்சித் பாரத் உருவாக்கத்தில் தங்களின் பங்களிப்பை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


