Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இயற்கை உரங்கள் மூலம் மண்ணின் வளத்தை பாதுகாக்கலாம்: வேளாண் துறை அறிவுறுத்தல்

போடி, ஜூன் 8: மண்ணை வளமாக வைத்திருப்பதற்கு இயற்கை உரங்களின் உபயோகத்தை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: இயற்கை உரத்தில் பல வகைகள் உள்ளன. மக்கிய சாண உரம், கம்போஸ்ட் உரம், ஆடு மாடுகள், கோழிகளின் கழிவு உரம், மற்ற மிருகங்களின் கழிவு உரம், பசுந்தாள் உரம், பசுந்தழை உரம், புண்ணாக்கு உரம், கரும்பு ஆலை கழிவு உரம், தென்னை நார் கழிவு உரம் என பல்வேறு வகைகள் உள்ளன. இதுபோன்று இயற்கையான அனைத்து கழிவுகளால் ஆக்கப்பட்ட உரங்கள் அனைத்தும் இயற்கை உரம் என்று அழைக்கப்படுகிறது. இயற்கை உரம் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.

தழை, மணி, சாம்பல் சத்துக்களை தவிர்த்து மற்ற சத்துக்களும் இவற்றில் உள்ளன. எனவே இவற்றை நிலத்தில் இடுவதால் பயிர்களில் ஊட்டச்சத்துக்களின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்கிறது. மேலும், இயற்கை உரங்கள் மக்கி பயிர்கள் எடுத்து கொண்டது போக, மீதியுள்ள பொருளைத்தான் நாம் ‘மக்கு’ என்று அழைக்கின்றோம். இந்த மக்குவின் அளவு நிலத்தில் அதிகரிக்க, அதிகரிக்க அதன் வளம் மேம்படுகிறது.

இந்த மக்கு ஊட்டச்சத்துக்களை பிடித்து வைத்து கொள்ளும். நீரையும் தேவையான அளவில் வைத்து கொள்ளும். எனவே இயற்கை எரு அதிகமாக இடும் நிலத்தில் மக்குவின் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக மண்ணின் வளம் கூடுகிறது. இயற்கை எரு மண்ணின் அமைப்பை மாற்றி, நிலத்தை சிறப்பானதாக மாற்றுகிறது. மண்ணை பொளபொளப்பாக்கி உரங்கள் வீணாகாமல் தடுத்து, எளிதில் அவற்றை பயிர்கள் எடுத்து கொள்ள வழிசெய்கிறது. இயற்கை எருக்கள் நீரை பிடித்து வைத்திருந்து பயிர்களின் தேவைக்கும், அதிக நீரை வடிக்கவும் உதவுகிறது. இயற்கை எரு மக்கும் போது உண்டாகும் அமிலங்கள், நிலத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு கிட்டும் வகையில் அதிகளவில் எடுத்து கொடுக்கிறது. பசுந்தாள், பசுந்தழை உரங்கள், மணிச்சத்தை கிட்டும் நிலைக்கு கொண்டு வந்து பயிர்கள் எளிதில் எடுத்து கொள்ள உதவுகின்றன. இதுபோன்று எண்ணிலடங்கா நன்மைகளை இயற்கை உரங்கள் மண்ணிற்கு வழங்கி அவற்றின் வளத்தை பாதுகாக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.