Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

புழுதிமேடு பகுதியில் அகழாய்வு பணி மேற்கொள்ள வலியுறுத்தல்

ஆண்டிபட்டி, மே 7: ஆண்டிபட்டி, சண்முகசுந்தரபுரம் அருகில் புழுதிமேடு எனும் பகுதியில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு சங்க காலத்தில் இருந்த ஊரிருக்கை பகுதியாக மதிப்பிடப்படுகிறது. இங்கு கள மேற்பரப்பு ஆய்வு செய்யும்போது பலதரப்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு தொல்லியல் ஆர்வலர்கள் நடத்திய கள ஆய்வில், அடர்த்தியாக மண் ஓடுகள், வட்டச் சில்லுகள், அலங்கார வேலைப்பாடுகள் அமைந்த மண்பானை ஓடுகள், கூரை ஓடுகள், சுடுமண் குழாய்கள், உடைந்த சுடுமண் கெண்டி மூக்குகள், சுடுமண் காதணிகள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கள ஆய்வில் கிடைக்கும் பொருட்களின் பழமையை ஆய்வு செய்யும்போது, சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் தொன்மைக்குரியது தெரியவந்துள்ளது. நீர் வளமும் மண் செழிப்பும் நிறைந்த இப்பகுதியில் பழங்காலத்தில் ஊர் இருந்திருக்க வேண்டும். மேலும், கிபி 9, 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை ஒன்றும், கிபி 12, 13 நூற்றாண்டைச் சேர்ந்த சிதைந்த கோயிலும், அங்கிருந்து எடுத்து வைக்கப்பட்ட உடைந்த முருகன் சிலையும், கல்வெட்டும் காணக் கிடைக்கிறன. எனவே, தமிழ்நாடு அரசும், தொல்லியல் துறையும் இப்பகுதியில் அகழாய்வு நடத்தினால் அரிய பல தமிழக வரலாற்றுத் தகவல்கள் வெளிப்படுவதுடன், தேனி மாவட்டத்தின் பழமையும் புலப்படும்’’ என்றனர்.