Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வெளிமாநில வரத்து அதிகரிப்பால் தேங்காய் கொள்முதல் விலை சரிவு: விவசாயிகள் கவலை

வருசநாடு, ஜூலை 6: தேனி மாவட்டத்தில் கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளால் தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளிலிருந்து சென்னை, மதுரை, கோவை, விருதுநகர், திருநெல்வேலி, காங்கேயம் உள்ளிட்ட ஊர்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் தேங்காய்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இப்பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் தேங்காய்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் வெளிமாநில தேங்காய்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் தற்போது ஒரு தேங்காய் ரூ.14 முதல் ரூ.15 வரை மட்டுமே மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதன் காரணமாக அவற்றின் விற்பனை சரிந்துள்ளதால் தற்போது 4 லாரிகளில் மட்டுமே வெளியூர்களுக்கு தேங்காய்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வெளிமாநில தேங்காய் வரத்தால் உரிய விலை கிடைக்காமல் உள்ளூர் விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேங்காய்கள் விற்பனை செய்யப்படாமல் தோப்புகள் மற்றும் குடோன்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘‘கடந்த சில தினங்களாக வெளிமாநிலங்களில் இருந்து தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் தேங்காய் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தேங்காய் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இப்பகுதியில் தென்னை விவசாயம் அடியோடு அழிந்து விடும் அபாயம் உள்ளது. எனவே உள்ளூர் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.