Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வானில் கூடிய கருமேகத்தால் இருளில் சிக்கிய சின்னமனூர்; கொட்டிய மழையால் மக்கள் உற்சாகம்

சின்னமனூர், நவ. 3: சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் முழுவதும், விவசாயம் சார்ந்ததாக இருக்கிறது. இங்கு பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீரின் உதவியுடன், இருபோகம் நெல் சாகுபடியும், வாழை, தென்னை, திராட்சை, காய்கறிகள் கரும்பு, சோளம், கேழ்வரகு, கப்பை மற்றும் பல்வேறு பூ வகைகள் உள்ளிட்ட ஏராளமானவை விளைவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பருவகால மாற்றங்களின் காரணமாக போதிய அளவில் மழையின்றி இருக்கும் நிலையில், எல் நினோ தாக்கம் எதிரொலியாக கால மாற்றம் ஏற்பட்டு, பல்வேறு இடங்களில் நினைத்த நேரத்தில் மழை பெய்யும் நிலை உருவாகி இருக்கிறது.

இதனை உறுதி செய்யும் வகையில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை முழுமையாக ஏமாற்றியதால்,இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டது. பின்னர் சில மாதங்கள் கழித்து, சில பகுதிகளில் குறைந்த அளவில் பெய்த மழையால் இடைப்பட்ட போகமாக பல இடங்களில் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடங்கிய வடகிழக்கு பருவமழையும் முழுமையாக பெய்யாமல் திடீரென இடைவெளி விட்டுள்ளது. இதற்கிடையே வங்காள விரிகுடா கடலில் உருவாகும் புயலின் எதிரொலியாக கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே கடந்த வாரம் பெய்த மழையால் சின்னமனூர் பகுதியில் இருக்கும் உடையகுளம், செங்குளம், கருங்கட்டான்குளம் சிறுகுளம், சுண்டக்காயன் குளம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில், மிகவும் குறைந்த அளவிலேயே தண்ணீர் சேகரமாகி இருக்கிறது. இதனால் எப்போது மழை பெய்யும் என்று விவசாயிகள் வானம் பார்த்து காத்திருக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இந்நிலையில் சின்னமனூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக. அவ்வப்போது வானம் இருண்டு மேகங்கள் திரண்டு மழை பெய்வதுபோல் தோற்றம் அளிக்கிறது. பின்னர் கருமேகங்கள் கலைந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது.

இதற்கிடையே நேற்று நண்பகல் 12 மணிக்கு மேல் சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டு நகரின் வெளிசத்தை மறைத்தது. அத்துடன் குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டது. இதனால் கண்டிப்பாக பலத்த மழை பெய்யும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்தனர். இதன்படி மாலை 5 மணிக்கு பிறகு சில பகுதிகளில் சாரலாக துவங்கி பின்னர் பலத்த மழையாக மாறியது. இதனால் சாலைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதுபோன்ற மழை தொடர்ந்தால், இப்பகுதியில் நடைபெறும் விவசாய பணிகளுக்கு தேவையான தண்ணீர் வழங்கும் குளங்கள், கண்மாய்கள் விரைவில் நிரம்பும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.