தேனி அரசு மருத்துவமனை சேவை மையத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு; 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.!!
தேனி, நவ. 3: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு பொது இடங்களில் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் ஒரு மைய நிர்வாகி மற்றும் ஒரு பல்நோக்கு உதவியாளர் ஆகிய பதவிகள் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இவற்றில் பொது இடங்களில் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலிப்பணியிடங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான தகுதிகள் மற்றும் முழுவிபரங்களை https://theni.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட பதவிக்கு தகுதியுள்ள நபர்கள் அவர்கள் குறித்த சுயவிபர குறிப்பு மற்றும் கல்விச் சான்றிதழ் நகல்களில் சான்றொப்பம் பெற்று நவ.20ம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண்.67, மூன்றாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். இத்தகவலை கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.


